Wednesday, August 26, 2009

மின்மினி 02


இவன் முதல் பயணம் சற்று குழப்பமான வித்தியாசமான பயணம்.... தனியாக ஆரம்பித்த பயணம், இடையிடையே நிறுத்ததில் ஒன்றிணைந்து மறுபடி தனியாகப் பயணிக்கும்!ஆரம்பத்திலேயே நிறுத்தத்தில் தேவைப்பட்டது துணை அல்ல பிணை என்று தெரிந்திருந்தால் அவன் தப்பித்திருப்பான்... இது எனது பார்வை!


அவள் தந்த பக்குவம் தான் இன்று இப்படி ஒருத்தியை அடையாளப்படுத்தியது...... இது அவன் பார்வை!
(positive thinking.ஆம்)


பால் போன்ற பதினாறு வயது... சரியாகச் சொன்னால் பத்து பதினோராம் தரம். அந்தக் காலக் கட்டத்தில் அதிகளவு பேசப்பட்ட காதல்களில் அதுவும் ஒன்று! சுப்பிரமணியபுரம்..... கல்லூரி.... நாடோடிகள்... இந்தப் படங்கள் எல்லாம் அவன் காதலைப் பார்த்து பாதிப்படைந்தவை.(விளக்கம் பின்னால்)

அவள் 01 (என்ன 01 என்று முறைப்பா? இவளல்ல நாயகி இருப்பினும் இவளும் அவள் தானே.... முதலில் வந்ததால் 01)


இவள் நாயகி இல்லாதபடியால் அதிகம் இவள் குசலங்கள் தேவையில்லை....ஆனாலும்... அழகாயிருப்பாள் அவள்......அமைதியான ஒரு அழகு....(அமைதிக்குப் பின் ஆபத்து தானே?) அவளைப் பார்த்தால் ஒருவனின் 'அபி'லாஷைகள் எல்லாம் 'தா'னாக அடங்கிப் போகும்....


அவளைப் பார்த்தான்....காதலித்தான்.......


பார்த்ததும் காதலா? என்று சலிக்க வேண்டாம்..! ஒரு பதினாறு வயதுப் பையனிடம் பார்த்ததும் காதலைத் தான் எதிர்பார்க்க முடியும்.... பருவக் கிளர்ச்சியாய்ற்றே.... பக்குவப்பட்ட காதலை எதிர்பார்க்க முடியுமா? முதல் காதல் பக்குவப்பட்டதன் பின் பதியப்படுமானால் உலகில் காதல் தோல்விகளே இல்லாமல் போகும்..!
அவளைப் பார்த்ததும் காதலித்தானே தவிர...தன் காதலை பக்குவமானதாகக் காட்ட அவன் சொன்ன காரணங்கள் பல....


அவளைக் காமத்துடன் பார்க்க மனது வரவில்லை என்பது முதல் காரணம்....(காமம் இல்லாத காதல்.... காதல் அல்ல.... கதைப்போம் இன்னும்)
அவள் அம்மா சொன்னதற்காக கலாசார உடையிலேயே அவள் தரிசனங்கள் தருவதாக யாரோ சொன்ன பெட்டித் தகவல் இன்னொரு காரணம்...
இதுவரை வேறெந்த ஆணிடமும் அடிபணியவில்லை.... எனந்த ஆணையும் அடிபணிய வைக்க முயலவும் இல்லை-அடுத்த காரணம்!


சுருக்கமாக அவன் காதல்.............


அவன் காதலித்தான் அவளை.... அவளுக்கும் தெரியும் காதலிக்கிறான் என்று.... அவளுக்கும் பிடித்திருந்தது அவனை(பிடிக்காமல் போகுமா? காதலித்த விதம் அப்படியே....) முதல் முறை பேசியபோது சம்மதம் சொன்னவள் இரு நாட்களில் மறுப்பு மொழி அனுப்பினாள்... விடுவானா விக்கிரமாதித்தன்? மறுபடி காதல்..... மறுபடி சம்மதம்.... மறுபடி மறுப்பு.... இப்படியாக மூன்று முறைகள்....இரு வருடங்களும் ஓடிவிட்டன...


இவற்றிற்கெல்லாம் அவள் சொன்ன காரணங்கள் அவனாள் நியாயமாக நினைக்கப்பட்டன..! நண்பர்கள்... வீட்டுப் பிரச்சினை..... இது அவள் சொன்ன காரணங்கள்!

(இந்த ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு பெண்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே..அரசியலே ஆடிப் போகும்! ஆண்களுக்கும்
வீட்டுப் பிரச்சினை இருக்கும் என்பதை அடிக்கடி மறந்து போகிறார்கள்... நீங்கள் ஆண்தானே உங்களுக்கென்ன?-என்று மழுப்பல் வேறு! எல்லாவற்றுக்கும் சமவுரிமை கேட்கும் பெண்கள் சில இங்களில் முழு உரிமையையும் தாங்களே எடுத்துக் கொள்ள நினைப்பது என்ன நியாயம்?)


இவனும் அதை எல்லாம் ஏற்றுக் கொண்டான்! ஏற்றுக் கொண்டு அடித்த வசங்கள் இருக்கே... அப்பப்பா...அவன் அடித்த வசனங்களின் சாரம் இது...!
“பரவாயில்லை... நான் படித்து முடிக்கும் வரை பொறுத்தால் போதும்...என் வீட்டில் அனுமதி பெற்று உன்னைப் பெண் கேட்பேன்...
அப்போது கூட நீ சம்மதம் என்று சொல்ல வேண்டாம், என்னைப் பிடித்திருப்பதாக மட்டும் தலை ஆட்டினாலே போதும்” இப்படியெல்லாம் தாங்க முடியாதவசனங்கள்....!
யார் வேண்டுமெண்றாலும் வசனம் பேசல்லம் ஆனால் செயல்.....?முடிவு.....?வழக்கம் போலயத் தான்...

(..... இன்னும் பயணிப்போம்.....)

Tuesday, August 25, 2009

மின்மினி 01

இந்த தேசம் பற்றிக் கூற முன் அவனைப் பற்றிச் சற்று ஆராய வேண்டும்.... (கதாநாயகனாயிற்றே)


ஆறடிக்கு அமைவாக உயரம்.... பொதுவான நிறம்...முகத்தில்மெலிதான தாடி.... சோகமும் சுகமும் இனம்பிரிக்க முடியாத ஒரு ஈர்க்கும் சிரிப்பு....ஒரு கண்ணாடி.... சினிமாக் காதலன் போல் இல்லா விட்டாலும் ஒரு சராசரிப் பெண்ணின் சராசரி எதிர்பார்ப்புகளை விட சற்று அதிகமாயிருக்கும் சராசரிப் பையன் அவன்....! ‍இது அவன் அழகியல்!

எதையும் இலகுவாக எடுக்கும் குணம்... நண்பர்களுக்காய் மட்டும் துடிக்கும் நாடி... குரங்குத் தனமான சேஷ்டைகள்.... யாரைப் பற்றியும் கவலைப்படாது தன்னை ஒரு திறந்த புத்தகமாக வைத்திருக்கும் ஒரு புத்த(க)ன் அவன்...!
நன்றாகப் படிக்க முடிந்தாலும் சராசரியான‌ படிப்பு.....படிப்பை விட எலாவற்றிலும் ஆர்வம்.... எங்கு போனாலும் எவருடனும் இலகுவில் நட்பு....! இது அவன் பொதுவியல்!

இது தவிர பெண்கள் என்றாலே எல்லோருக்கும் இருக்கும் ஈர்ப்பு இவனில் சற்று அதிகம்..! காதல் என்ற மென்மையான உணர்வுகளை வார்த்தைகளாக்கும் பக்குவம் இதற்குக் காரணமாயிருக்கலாம்! அவன் கவிதைகளால் தத்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அவன் கவிதைகளில் உள்ள‌ வார்த்தைகளை விட அதிகமாயிருக்கும்.... (இதை வாசிக்கும் பெண்கள் அவனைப் பொறுக்கி என்று மட்டும் நினைக்க வேண்டாம்)

ஒருவன் எத்தனை பேரைப் பார்த்தாலும் எத்தனை பேரை ரசித்தாலும்......... பார்த்த பின்பும் ரசித்த பின்பும் அவனில் பளிச்சிடும் பெண்கள் சிலரே... அதில் சிலர் தவற ஒருத்தி மட்டும் காதலியாவாள்.....

அப்ப‌டி அவனில் பளிச்சிட்டவர்கள் பலர்.... காதலியானவர்கள்...???...!
எந்த ஒரு காதலும் எடுத்த எடுப்பிலேயே பக்குவப்படுப்வதில்லையே... சில காதல்கள் காதலித்த பின் பக்குவப்படும்....

 சில பிரிந்து அடுத்த காதலில் பக்குவப்படும்... சில பக்குவப்படாமலேயே போகும்....!
 
இவன் மட்டும் என்ன விதிவிலக்கா? ‍இவன் இரண்டாம் ரகம்...!
முதல் காதல் தந்த பக்குவம் அடுத்த காதலில்..!

என்னடா புதுத் திருப்பம் என்ற குழப்பமா?
இப்போது தானே தேசம் மின்னத் தொடங்குகிறது.... 
............ இன்னும் பயணிப்போம்.............!

Thursday, August 20, 2009

மின்மினித் தேசம் - ஓர் அறிமுகம்...

இது ஒரு காதலின் கதை.....


மின்மினி தேசத்திற்கு நல்வரவு.........

அறிஞர்களும் கவிஞர்களும் அலசிப் போட்ட வலைப் பதிவுக்குள் மினுங்கிடத் துடிக்கும் ஒரு மின்மினி நான்...! எதையாவது எழுதி என்னையும் ஒரு பதிவாளனாய் அடையாளப்படுத்த நினைக்கும் எனக்கு அரசியலைப் பற்றியோ
சமூக ஆழங்களைப் பற்றியோ ஆராய பொறுமையும் இல்லை......அனுபவமும் இல்லை.... அவ்வளவு விரைவில் அடிவாங்கி சாக விருப்பமும் இல்லை. எனக்கிருக்கும் அனுபவங்களை எல்லாம் தொகுத்து எடுத்த நேசம் இந்த மின்மினி தேசம்....!

ஒருவனின் இனிய காதலைப் பற்றிய நினைவுகள் இது.....

காதல்.................................... காதலைப் பற்றி நிறையப் பேர் நிறையக் கூறுவார்கள்! காதல் கழற்றிப் போட்ட செருப்பு என்றான் ஒருவன்..... மலைகளின் எதிரில் நின்று 'ஐ லவ் யு' சொல்கின்ற சங்கதி அல்ல காதல் அது ஆத்மார்த்தமானது
என்கிறான் வைரமுத்து!

என்னைப் பொறுத்த வரை இந்த உலகில் வரைவிலக்கணப்டுத்த முடியாதவை மூன்று...!நட்பு......தாய்..... காதல்!

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவனும் வாழ்வின் ஒரு தடத்திலாவது (மச்சக்காரனாக இருந்தால் பல தடங்களில்) காதல் என்ற வண்டியில் பயணித்திருப்பான்!

அந்த பயணங்கள் மறக்கப்படுவதில்லை...... மறக்க நினைக்கப்படுவதும் இல்லை.
சில பயண‌ங்கள் தனியாகப் பயணிக்கும்.....

சில பயணங்கள் ஒன்றாய்ப் பயணித்து வேறு வேறு நிலையங்களில் முடியும்.
சில பயணங்கள் மட்டும் ஒன்றாய்ப் பயணித்து ஒரே நிலையத்தில் முடியும்.....!

அவ்தப் பயணங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் ஒவ்வொரு பயணமும் ஒரு சரித்திரம். அதற்குள் சரிவுகளிருக்கும் சாம்ராஜ்ஜியங்களிருக்கும்! எது எப்படிப் போனாலும் அந்தப் பயணங்கள் ஒவ்வொன்றும் இனிமையானது........

மௌனத்துக்கும் வார்த்தைக்கும் இடைப்பட்ட ஆழத்தைப் போல ஆழமானவை!
சரிவுகளாகட்டும்... காதல் சாம்ராஜ்ஜியங்களாகட்டும் காதல் பயணங்கள் ஓய்வதில்லை......!

ம்ம்ம்...... மின்மினித் தேசம் என்ற பெயரின் பின்புலத்தைக் கூற வந்து பயணங்கள் ஓய்வதில்லை என்று படம் வரை போயாயிற்று!

மின்மினியைப் போலத்தான் காதலும்........

மின்மினி தனக்குத் தானே இரவையும் பகலையும் உருவாக்கிக் கொள்வது போல் தான் காதலும்......தனக்குள்ளே பேசிக்கொள்ளும்...தானாகச் சிரிக்கும்...அர்த்தமின்றி அழும்.. அழகானதையெல்லாம் கவிதையாக்கும்....
ஒரு மின்மினி தனக்குத் தானே ஒரு உலகை உருவாக்கி வாழ்வது போலத் தான் காதலும்.... தனக்குள்ளேயே
உலகங்கள் சிருஷ்டித்துத் தனக்குள்ளேயே  வனங்கள் அமைத்து மின்மினிகளோடு மின்மினியாக மாறிப் போகும்
மின்மினி தேசம் ‍‍‍‍..காதல்.....

இன்னொரு பார்வையில், சூரியக் கிரணங்கள் பட்டு சுடுபட்டுப் போகும் மின்மினியின் குட்டி மின்னல்கள் போலத் தான் காதலும்... மனங்களையும் தாண்டி மதங்களினதும் சாதிகளினதும் மரணப் பிடிகளில் மண்டியிட்டு மரணித்துப் போகும்....

இந்த மின்மினி தேசம் முழுவதும் காதல் மின்மினிகளின் சஞ்சாரம்...
காதல் என்றவுடன் வழக்கமான கதை என்று நினைக்க வேண்டாம்... இது பக்குவப்படாத ஒரு காதல் மறுபடி
ஒருகாதலில் அவனைப் பக்குவப்படுத்திய பதிவுகள்....

இந்த மின்மினி தேசம் மின்மினி என்றும்.... அவனின் கடிதங்கள் என்றும்... அவளின் கடிதங்கள் என்றும்... சொல்லவந்த காதலை தாங்கப் போகின்றது!

இந்தக் காதல்....
சினிமாத்தனங்களுக்குள் க‌ட்டுப்பட்ட அல்லது இலக்கியத்தனமான காதலோ இல்லை... இப்படி ஒரு காதலை
இதற்கு முன் யாரும் சொன்னதில்லை... இப்படி காதலை யாரும் கண்டதேயில்லை என்றெல்லாம் புழுக மாட்டேன்...
இது நீங்கள் அன்றாடம் காணும், அனுபவிக்கும் காதல் தான்... ஒரு சாதரண மனிதனின் காதல்...
அதற்காக... நெரிசல் மிகுந்த ப்ஸ்ஸில் நெருக்கம் தேடும் அல்ல‌து ஒற்றைக் குடையில் இரட்டைத் தலைகள் மறையும் கொச்சைத் தனமான காதல் என்றும் ஒத்துக் கொள்ள மாட்டேன்....
கற்பனைகள்......கனவுகள்...கவிதைகள் என்று விரியும் காதல், யதார்த்தங்களுக்குள் புகும் போது எப்படிச் சுருங்குகிறது என்பதை யதார்த்தத்துடன் சொல்ல முயன்றிருக்கிறேன்....

இங்கு காதலன் அவன் என்றும்... காதலி அவள் என்றும் விழிக்கப்படுவர்!