Thursday, August 20, 2009

மின்மினித் தேசம் - ஓர் அறிமுகம்...

இது ஒரு காதலின் கதை.....


மின்மினி தேசத்திற்கு நல்வரவு.........

அறிஞர்களும் கவிஞர்களும் அலசிப் போட்ட வலைப் பதிவுக்குள் மினுங்கிடத் துடிக்கும் ஒரு மின்மினி நான்...! எதையாவது எழுதி என்னையும் ஒரு பதிவாளனாய் அடையாளப்படுத்த நினைக்கும் எனக்கு அரசியலைப் பற்றியோ
சமூக ஆழங்களைப் பற்றியோ ஆராய பொறுமையும் இல்லை......அனுபவமும் இல்லை.... அவ்வளவு விரைவில் அடிவாங்கி சாக விருப்பமும் இல்லை. எனக்கிருக்கும் அனுபவங்களை எல்லாம் தொகுத்து எடுத்த நேசம் இந்த மின்மினி தேசம்....!

ஒருவனின் இனிய காதலைப் பற்றிய நினைவுகள் இது.....

காதல்.................................... காதலைப் பற்றி நிறையப் பேர் நிறையக் கூறுவார்கள்! காதல் கழற்றிப் போட்ட செருப்பு என்றான் ஒருவன்..... மலைகளின் எதிரில் நின்று 'ஐ லவ் யு' சொல்கின்ற சங்கதி அல்ல காதல் அது ஆத்மார்த்தமானது
என்கிறான் வைரமுத்து!

என்னைப் பொறுத்த வரை இந்த உலகில் வரைவிலக்கணப்டுத்த முடியாதவை மூன்று...!நட்பு......தாய்..... காதல்!

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவனும் வாழ்வின் ஒரு தடத்திலாவது (மச்சக்காரனாக இருந்தால் பல தடங்களில்) காதல் என்ற வண்டியில் பயணித்திருப்பான்!

அந்த பயணங்கள் மறக்கப்படுவதில்லை...... மறக்க நினைக்கப்படுவதும் இல்லை.
சில பயண‌ங்கள் தனியாகப் பயணிக்கும்.....

சில பயணங்கள் ஒன்றாய்ப் பயணித்து வேறு வேறு நிலையங்களில் முடியும்.
சில பயணங்கள் மட்டும் ஒன்றாய்ப் பயணித்து ஒரே நிலையத்தில் முடியும்.....!

அவ்தப் பயணங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் ஒவ்வொரு பயணமும் ஒரு சரித்திரம். அதற்குள் சரிவுகளிருக்கும் சாம்ராஜ்ஜியங்களிருக்கும்! எது எப்படிப் போனாலும் அந்தப் பயணங்கள் ஒவ்வொன்றும் இனிமையானது........

மௌனத்துக்கும் வார்த்தைக்கும் இடைப்பட்ட ஆழத்தைப் போல ஆழமானவை!
சரிவுகளாகட்டும்... காதல் சாம்ராஜ்ஜியங்களாகட்டும் காதல் பயணங்கள் ஓய்வதில்லை......!

ம்ம்ம்...... மின்மினித் தேசம் என்ற பெயரின் பின்புலத்தைக் கூற வந்து பயணங்கள் ஓய்வதில்லை என்று படம் வரை போயாயிற்று!

மின்மினியைப் போலத்தான் காதலும்........

மின்மினி தனக்குத் தானே இரவையும் பகலையும் உருவாக்கிக் கொள்வது போல் தான் காதலும்......தனக்குள்ளே பேசிக்கொள்ளும்...தானாகச் சிரிக்கும்...அர்த்தமின்றி அழும்.. அழகானதையெல்லாம் கவிதையாக்கும்....
ஒரு மின்மினி தனக்குத் தானே ஒரு உலகை உருவாக்கி வாழ்வது போலத் தான் காதலும்.... தனக்குள்ளேயே
உலகங்கள் சிருஷ்டித்துத் தனக்குள்ளேயே  வனங்கள் அமைத்து மின்மினிகளோடு மின்மினியாக மாறிப் போகும்
மின்மினி தேசம் ‍‍‍‍..காதல்.....

இன்னொரு பார்வையில், சூரியக் கிரணங்கள் பட்டு சுடுபட்டுப் போகும் மின்மினியின் குட்டி மின்னல்கள் போலத் தான் காதலும்... மனங்களையும் தாண்டி மதங்களினதும் சாதிகளினதும் மரணப் பிடிகளில் மண்டியிட்டு மரணித்துப் போகும்....

இந்த மின்மினி தேசம் முழுவதும் காதல் மின்மினிகளின் சஞ்சாரம்...
காதல் என்றவுடன் வழக்கமான கதை என்று நினைக்க வேண்டாம்... இது பக்குவப்படாத ஒரு காதல் மறுபடி
ஒருகாதலில் அவனைப் பக்குவப்படுத்திய பதிவுகள்....

இந்த மின்மினி தேசம் மின்மினி என்றும்.... அவனின் கடிதங்கள் என்றும்... அவளின் கடிதங்கள் என்றும்... சொல்லவந்த காதலை தாங்கப் போகின்றது!

இந்தக் காதல்....
சினிமாத்தனங்களுக்குள் க‌ட்டுப்பட்ட அல்லது இலக்கியத்தனமான காதலோ இல்லை... இப்படி ஒரு காதலை
இதற்கு முன் யாரும் சொன்னதில்லை... இப்படி காதலை யாரும் கண்டதேயில்லை என்றெல்லாம் புழுக மாட்டேன்...
இது நீங்கள் அன்றாடம் காணும், அனுபவிக்கும் காதல் தான்... ஒரு சாதரண மனிதனின் காதல்...
அதற்காக... நெரிசல் மிகுந்த ப்ஸ்ஸில் நெருக்கம் தேடும் அல்ல‌து ஒற்றைக் குடையில் இரட்டைத் தலைகள் மறையும் கொச்சைத் தனமான காதல் என்றும் ஒத்துக் கொள்ள மாட்டேன்....
கற்பனைகள்......கனவுகள்...கவிதைகள் என்று விரியும் காதல், யதார்த்தங்களுக்குள் புகும் போது எப்படிச் சுருங்குகிறது என்பதை யதார்த்தத்துடன் சொல்ல முயன்றிருக்கிறேன்....

இங்கு காதலன் அவன் என்றும்... காதலி அவள் என்றும் விழிக்கப்படுவர்!

5 comments:

சுபானு said...

வலைப்பூக்களில் ஜொலிக்க வந்திருக்கும் இந்த மின்மினிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

Siv said...

This is indeed very happy and joy to read a new face of love in new trent...
I am sure, you will succeed in your writing style and your own simple flow is really wishable.
Write more Mr.Poet, we are there for read and critisize. J

விஷாகன் said...

// மறுமொழி @சுபானு
உங்கள் வாழ்த்துக்கு நன்றி! //

// மறுமொழி @சிவ்
தங்கள் வாழ்த்துக்கும் உற்சாகத்திற்கும் நன்றி //

நிமல்-NiMaL said...

வாழ்த்துகள் விஷாகன்...

இது உங்களின் கதையா யாரின் கதை என்ற தேடலை தாண்டி சிறந்த ஒரு தொடரை எதிர்பார்க்கிறேன்...

கி . அன்பு said...

வாழ்த்துக்கள்

Post a Comment

தங்கள் இனிய கருத்துக்களை, விமர்சனங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.